நத்தம் அருகே சந்திவீரன் கோயிலில் கும்பாபிஷேகம்

நத்தம், நவ. 12: நத்தம் அருகே சிறுகுடியில் நடந்த சந்திவீரன் கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நத்தம் அருகே சிறுகுடியில் சந்திவீரன் சுவாமி, முரங்கன சுவாமி, புணரோத்தாரன செம்மாயி அம்மன் கோயில்கள் உள்ளன. இங்கு நேற்று  கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் செம்பாயி அம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் தேவதா அனுக்கைஞ, கிராம சங்கல்பம், விக்னேஷ்வர, புண்யாக வாசனம், தனபூஜைகள் நடந்தன. தொடர்ந்து கணபதி ஹோமத்தடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. முதல் கால யாக வேள்விகளை தொடர்ந்து இரவு பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலையில் கோ பூஜையை தொடர்ந்து யாகசாலையில் காசி, ராமேஸ்வரம், அழகர்கோவில் போன்ற புனித தலங்களில் இருந்து கொண்டு வந்து வைத்திருந்த புனித நீர் நிரம்பிய குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக புறப்பாடாகி கோயில் உச்சியை சென்றடைந்தது.

அங்கு வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. அப்போது கருடன் வட்டமிட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இந்திரா நகர் பகுதியில் உள்ள சந்திவீரன், முரங்கன சுவாமிகளின் கோயில் கலசங்களுக்கும் அதனருகில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலிருந்து புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்களுக்கு பூஜை மலர்களும், புனித நீரும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் நத்தம் எம்எல் ஆண்டி அம்பலம், அதிமுக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் நத்தம் விசுவநாதன், மாநில ஜெ பேரவை இணைசெயலாளர் கண்ணன், அமர்நாத் மற்றும் உள்ளூர், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிறுகுடி காரணக்காரர்கள், கிராம பொதுமக்கள், இந்திராநகர் தேவேந்திரகுல பொதுமக்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories:

>