×

கொல்லப்பட்டி சாலை கொல்லப்போகுது ஆளை

குஜிலியம்பாறை, நவ. 12: குஜிலியம்பாறை அருகே ஆர்.கொல்லபட்டி சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் பேரூராட்சி 14வது வார்டில் உள்ளது ஆர்.கொல்லபட்டி. இங்கு 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. 400க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். குஜிலியம்பாறையில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ள சாலையின் எதிரே ஒரு கிலோமீட்டர் தூரம் செல்லும் வரை செல்லும் இவ்வூரின் தார்சாலை பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 1996ம் ஆண்டு போடப்பட்டது. இச்சாலையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் சாலையின் குறுக்கே வறட்டாறு ஓடை செல்கிறது. இந்த வறட்டாறு ஓடை செல்லும் சாலையில் கடந்த 1980ம் ஆண்டு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் தரைப்பாலம் வழியே மழைநீர் முழுவதும் செல்வதால் இவ்வழித்தடம் வழியே வாகனஓட்டிகள் செல்லமுடியாத நிலை உள்ளது. எனவே தரைப்பாலம் அமைந்துள்ள இடத்தில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து ஆர்.கொல்லப்பட்டி மக்கள் கூறுகையில், பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமான இச்சாலை கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது.  தற்போது மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் புதிய தார்சாலை போடப்பட்டது. மீதமுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இச்சாலையில் உள்ள தரைப்பாலத்தில் புதிய பாலம் கட்டும் பணியின் போது, இவ்வழித்தடத்தில் புதிய தார்சாலை அமைக்கப்படும் என கூறி பேரூராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் காச்சக்காரன்பட்டி, ராமகிரி ஆகிய கிராமங்களுக்கு இச்சாலை வழியே செல்லும் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பொம்மாநாயக்கன்பட்டியில் இருந்து ஆர்.கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு மாணவர்களை வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்களும் அவதிப்படுகின்றனர். மேலும் விபத்து அபாயமும் உள்ளது. மழைகாலங்களில் வறட்டாற்றில் மழைநீர் செல்லும் போது, பள்ளிக்கு குழந்தைகளை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே வறட்டாறு செல்லும் இச்சாலையில் புதிய பாலம் கட்டவும், 23 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ள வழித்தடத்தில் புதிய தார்சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kolapatti Road ,
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...