குடிநீர் வந்து ஒரு வருஷமாச்சு

திண்டுக்கல், நவ. 12: அம்பாத்துரை அமலிநகர் பகுதியில் குடிநீர் வந்து ஒரு ஆண்டாகி விட்டதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.  திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அம்பாத்துரை ஊராட்சி, பெருமாள்கோவில்பட்டி அஞ்சல், அமலிநகரை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வந்து ஒரு ஆண்டாகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எத்தனையோ முறை புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாங்கள் குடிநீர் குடம் ஒன்றிற்கு ரூ.5க்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்களே ஆவர். இதனால் நாங்கள் சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில் பாதி குடிநீருக்கே செலவாகிறது. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: