ஓடையை மறித்து பாதை அமைப்பதா?

திண்டுக்கல், நவ. 12: ஓடையை மறித்து பாதை அமைப்பதை மறுபரிசீலனை செய்ய கோரி தோட்டனூத்து இஞ்சிமரத்துப்பட்டி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் அருகே தோட்டனூத்து கிராமம், நல்லமநாயக்கன்பட்டி அஞ்சல், இஞ்சிமரத்துப்பட்டியை சேர்ந்த மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்து விட்டு கூறியதாவது, ‘எங்கள் ஊரில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி விவசாயிகளின் நிலங்கள் வழியாக குட்டைய பிள்ளை ஓடை என்ற பெயரில் ஒரு ஓடை செல்கிறது. இந்த ஓடையிலிருந்து வரும் தண்ணீர் பெரிய ஓடையில் ஒரு பகுதியின் கிளையாக விவசாய நிலங்களுக்கு இடையில் செல்கிறது. இது விவசாய நிலங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தற்போது இந்த ஓடையை எங்கள் ஊர் அருகில் இருக்கும் அழகர்நாயக்கம்பட்டியில் உள்ள ஒரு சமுதாய மக்கள், தங்களது மயான கரைக்கு செல்வதற்காக பாதையாக மாற்றி தருமாறு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு கொடுத்துள்ளனர்.

அதனடிப்படையில், அவர்கள் சர்வேயரை வைத்து அளந்து மயான கரை பாதையாக மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றனர். அப்படி பாதையாக மாற்றினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, இந்த ஓடைக்கு வரவேண்டும் என்றால் எங்கள் ஊருக்குள் வந்து அந்த சமுதாயத்தினர் செல்ல வேண்டும். இதனால் எங்களது இரு தரப்பினருக்கும் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் ஓடையாகவே இருப்பதற்கு மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories:

>