×

அயோத்தி வழக்கில் தீர்ப்பு, தற்கொலை மிரட்டல்கள் எதிரொலி குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை

நாகர்கோவில், நவ.12: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர்களிடம் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வருடம் கந்து வட்டி கொடுமையால் தொழிலாளி ஒருவர் மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்தார். அதன் பிறகு தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மனு அளிக்க வருகின்றவர்கள் சோதனையிடப்படுவது அவ்வப்ேபாது நடைபெறுகிறது. அதன்படி குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியிருந்தனர்.குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் வர மொத்தம் 4 நுழைவு வாயில்கள் இருந்தன. இவற்றில் இரு நுழைவு வாயில்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. தற்போது பிரதான நுழைவு வாயிலும், கூடுதல் கட்டிடம் அமைந்துள்ள நுழைவு வாயிலும் இயங்கி வந்தன. பிரதான நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வந்தனர். பின்னர் படிப்படியாக இந்த பாதுகாப்பு குறைத்துக் கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பாதுகாப்பை அதிகரிக்க எஸ்.பி. நாத் உத்தரவிட்டார். பிரதான நுழைவு வாயில் மட்டுமின்றி, கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கூடுதல் கட்டிட நுழைவு வாயிலிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றவர்கள் சோதனையிடப்படுகின்றனர். விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் அயோத்தி நில பிரச்னை தீர்ப்பு காரணமாக நேற்று மூன்றாவது நாளாக கூடுதல் போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை நடைபெறுகின்ற மனுநீதிநாளில் கலந்துகொள்ள மனுக்களுடன் வந்த பொதுமக்களின் உடைமைகளை சோதனையிட்ட பின்னரே போலீசார் அவர்களை வளாகத்திற்குள் அனுமதித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் காலை முதல் பரபரப்பு நிலவிய வண்ணம் இருந்தது.

Tags : Ayodhya ,office ,Kumari Collector ,
× RELATED அயோத்தியாப்பட்டணம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை