×

நாகர்கோவிலில் வெடி விபத்தில் படுகாயம் வலது கையை இழந்து தவிக்கும் பெண்

நாகர்கோவில், நவ.12: நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் விநாயகர் தெருவில், பார்வதி உடனுறை பரமேஸ்வரன் கோயில் உள்ளது. கந்தசஷ்டி விழாவையொட்டி கடந்த 2ம்தேதி மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வாண வேடிக்கை நடந்துள்ளது. அப்போது மேலே சென்று வெடிக்க வேண்டிய வெடி, தவறுதலாக கூட்டத்துக்குள் விழுந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் கிருஷ்ணன்கோவில் முதலியார் தெருவை சேர்ந்த முருகன் மனைவி லெட்சுமி (63), கோட்டார் பகுதியை சேர்ந்த குமாரசுவாமி மனைவி லெட்சுமி (64), கிருஷ்ணன்கோவில் முருகேசன் மகள் கோஷிகா (13) மற்றும் நாகர்கோவில் பிரைட் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து பிள்ளை மனைவி ருக்மணி(72) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் முதலியார் தெருவை சேர்ந்த லெட்சுமியின் வலது கை சிதைந்தது. அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கை முழுவதும் சிதைந்து போனதால், வயிறு பகுதியில் இருந்து சதையை இணைத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்கான செலவு சுமார் ரூ.7 லட்சம் வரை செலவு ஆகும் என டாக்டர்கள் கூறி உள்ளனர். இதுவரை 2 அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இன்னும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருக்கிறது. அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் தொடர் சிகிச்சையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லெட்சுமியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் ஆகும். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் பெயிண்டராக உள்ளார். தற்போது ரூ.7 லட்சம் வரை மருத்துவ செலவு செய்வதற்கான சூழ்நிலையில் குடும்பம் இல்லை. மேலும் கோயில் நிர்வாகத்தினரும் இதுவரை எந்த வித உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.இது குறித்து லெட்சுமியின் மருமகன் பிரவீன் கூறுகையில், அதிகபட்சமாக எங்களிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று ரூ. ஒன்றரை லட்சம் வரை திரட்டி விட்டோம். இதற்கு மேல் எங்களுக்கும் எந்த வசதியும் கிடையாது. மருத்துவமனையில் சமாளித்து மருத்துவ உதவி அளித்து வருகிறார்கள். வெடி விபத்து தொடர்பாக அதிகாரிகள் யாரும் வந்து விசாரிக்க வில்லை. மருத்துவ உதவி கேட்டு, மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளோம் என்றார்.வெடி விபத்துக்கள் சமயங்களில், சம்பந்தப்பட்ட தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி, படுகாயம் அடைந்தவர்களுக்கு மாவட்ட கலெக்டரின் பொது நிதியில் இருந்து நிதி உதவி பெற்று கொடுப்பது வழக்கம். ஆனால் லெட்சுமி பலத்த காயம் அடைந்து கையை இழந்து உயிருக்கு போராடும் நிலையில் வெடி விபத்து தொடர்பாக எந்த வித விசாரணையும் நடத்தப்பட வில்லை. மேலும் காவல் துறையும் விசாரணை நடத்தாமல் உள்ளது.

Tags : Nagercoil ,explosion ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை