×

‘ஐஸ் பிளாண்ட்’ அமைவதை தடுக்க வேண்டும்

நாகர்கோவில், நவ.12: நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் லிபின் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:வேர்கிளம்பி ஊராட்சிக்கு உட்பட்ட பூவன்கோடு பகுதியில் தனிநபர் ஒருவர் இடத்தை குத்தகைக்கு எடுத்து ஐஸ் பிளாண்ட் அமைக்க முயற்சி செய்து வருகிறார். அந்த இடம் பொதுமக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதி ஆகும். இந்த இடத்தில் மக்கள் சுமார் 650 அடி ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் ஐஸ் பிளாண்ட்டிற்கு தண்ணீர் எடுக்க ஆரம்பித்தால் புதிதாக குடிநீர் பிரச்னை ஏற்படும். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் குளங்கள், ஆறுகள் ஏதுமின்றி வறட்சியாக காணப்படும் பகுதியாகும். மேலும் பனிக்கட்டி தயாரிக்க அமோனியா பயன்படுத்தப்படும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுக்கு கொடிய நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு ஐஸ் பிளாண்ட் அமைவதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் நாகராஜன் அளித்த மனுவில், ‘நாகர்கோவில் நகருக்குள் பலமுறை பல விதத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மாற்றப்பட்டும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடு இல்லை. சாலைகள் ஆக்ரமிப்பே இதற்கு காரணம். இந்தநிலையில் கனரக வாகனம் பகல் நேரத்தில் நகருக்குள் வரக்கூடாது என்று அறிவிப்பு இருந்தும் ஜல்லி, மணல் எடுத்து செல்லும் வாகனங்கள் சர்வ சாதாரணமாக நகருக்குள் வந்து செல்கிறது. இதனை போக்குவரத்து காவலர்கள் கண்டுகொள்வது இல்லை. கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே கனரக வாகனங்கள் நாகர்கோவில் நகருக்குள் வராமல் தடுக்க தக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்’ என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ice Plant ,
× RELATED அந்தமானில் புதிய காற்றழுத்த...