×

திருவண்ணாமலை அருகே தான செட்டில்மென்ட் மூலம் நிலத்தை அபகரித்ததாக மகள் மீது முதியவர் புகார்

திருவண்ணாமலை, நவ.12: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ ரத்தினசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லாவண்யா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, சுய தொழில் கடனுதவி, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 487 பேர் மனுக்கள் அளித்தனர். அதன்பேரில், முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஆறுமுகம்(83), நடக்க இயலாத நிலையில், உறவினர்களின் உதவியுடன் தூக்கி வரப்பட்டார். அவரது பரிதாப நிலையை கண்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, முதியவரை அருகில் அழைத்து விசாரித்தார். அப்போது, முதியவர் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மனைவி இறந்துவிட்டார். என்னுடைய இரண்டு மகள்கள் திருமணமாகி வெளியூர்களில் உள்ளனர். இளைய மகள் அரும்பு என்பவர், உள்ளூரிலேயே திருமணமாகி வசித்து வருகிறார்.

இந்நிலையில், நான் வசித்து வரும் வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதித்தரவும், 1.35 ஏக்கர் நிலத்தை சகோதரிகளுடன் சேர்ந்து மூன்று பாகங்களாக பிரித்து கொள்வதாகவும் இளைய மகள் அரும்பு என்னிடம் தெரிவித்தார். அதன்படி, வீட்டை தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தேன்.அதைத்தொடர்ந்து, மற்ற இரண்டு மகள்களுக்கும் நிலத்தை பிரித்து எழுத பத்திர பதிவு அலுவலகம் சென்று வில்லங்கம் எடுத்துப்பார்த்தேன். அப்போது, வீட்டுக்கு பதிலாக, நிலத்தை தானசெட்டில்மெண்ட் எழுதி மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. எனவே, மகள் அரும்புவிடம் நியாயம் கேட்டேன். அப்போது, மகளும், பேரன்களும் என்னை அடித்து வீட்டில் இருந்து வீதிக்கு துரத்திவிட்டனர். சாப்பிடவும் வழியில்லை. தங்க இடமும் இல்லை. காலில் அடிபட்டுள்ளதால், மருத்துவ செலவுக்கும் வழியில்லை. எனவே, தானசெட்டில்மெண்ட்டை ரத்து செய்து, நான் வாழும் காலம்வரை என்னுடைய பெயரிலேயே நிலம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமாக மனுவில் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து, முதியவரின் மனு மீது கள விசாரணை நடத்தி, முதியவருக்கு தேவையான உதவிகள் செய்யவும், தேவைப்பட்டால் காப்பகத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட சமூக நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இந்நிலையில், கீழ்கச்சிராப்பட்டு இருதயா நகர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுடைய குடியிருப்புக்கு பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர். மேலும், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : elderly ,land ,Thiruvannamalai ,
× RELATED திடீர் பனிபொழிவால் வைரஸ் காய்ச்சல்: குழந்தைகள், முதியோர் அவதி