×

எஸ்பி உத்தரவை கண்டுகொள்ளாத டிரைவர்கள் தடையை மீறி மண்டி வீதியை ஆக்கிரமிக்கும் சரக்கு லாரிகள்

வேலூர், நவ.12: வேலூர் மண்டிவீதியில் சரக்கு வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தடை விதித்துள்ள நிலையில் அதை மீறும் வகையில் சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்கு ஏற்றி இறக்கும் பணி நடப்பதால் நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.வேலூர் மண்டி வீதியில் (கிருபானந்த வாரியார் சாலை) சரக்கு வாகனங்கள், ஆட்டோ, கார், லாரி என்று அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே பல இடங்களில் நிறுத்தி சரக்கு ஏற்றி, இறக்குவதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் வியாபாரிகளும் சாலையிலேயே கடைகளை வைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் அவ்வழியாக நடந்து செல்லக்கூட முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே, தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள், ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து போலீசார் மண்டிவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இடதுபுறம் மட்டும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும். வலதுபுறமாக நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி சரக்கு வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மண்டிவீதியில் வாகனங்களை நிறுத்தி சரக்குகளை இறக்கவும், ஏற்றவும் தடை செய்யப்படும் என்று போலீசார் வியாபாரிகளுக்கு துண்டுபிரசுரம் வழங்கினர்.

அதோடு இந்த விதிகளை மீறி சரக்கு வாகனங்கள் தடைசெய்யப்பட்ட நேரங்களில் இயக்கப்பட்டால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் எஸ்பி எச்சரிக்கை விடுத்திருந்தார்.ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி வேலூர் மண்டி வீதியிலும், லாங்கு பஜாரிலும் சரக்கு லாரிகளும், சரக்கு ஆட்டோக்களும் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டு சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி சகஜமாக நடந்து வருகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவல்துறை ஏற்கனவே அறிவித்தபடி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை சரக்கு வாகனங்களை மண்டி வீதியிலும், லாங்கு பஜாரிலும் நிறுத்தி வைக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Drivers ,SP ,Mandi Road ,
× RELATED கிருமாம்பாக்கத்தில் பரபரப்பு கடலூர்,...