×

கருக்கலைப்பு செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

வேலூர், நவ.12: கருக்கலைப்பு செய்த கணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 637 மனுக்கள் பெறப்பட்டன.இதில், பேரணாம்பட்டு தாலுகா சின்னதாமல்செருவு அடுத்த மத்தூர் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 45 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இரண்டரை ஏக்கரில் வீடு கட்டிக்கொள்ள அரசு பட்டா வழங்கியது. ஆனால் அந்த இடத்தை அதேபகுதியை சேர்ந்த பேபியம்மாள் என்பவர் பெற்றுக்கொண்டு தனக்கு சொந்தமான நிலத்தை எங்களுக்கு ஒதுக்கினார். அந்த இடத்தில் தற்போது வீடு கட்டி வசிக்கிறோம். ஆனால் அந்த நிலத்திற்கு இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இதனால் எங்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை. எனவே, எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

வேலூர் மண்டித்தெருவில் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வந்த வியாபாரிகள் 30 பேர் அளித்த மனுவில், ‘நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக மண்டி வீதியில் தள்ளுவண்டியில் உணவு கடை நடத்தி வருகிறோம். கடந்த 25ம் தேதி வடக்கு போலீசார் மண்டி வீதியில் உள்ள கடைகளை அகற்றினர். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மண்டி வீதியில் மீண்டும் தள்ளுவண்டியில் உணவு கடைகளை வைக்க அனுமதி அளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.அதேபோல், வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த விஜயலட்சுமி அளித்த மனுவில், ‘நான் கடந்த 2016ம் ஆண்டு ஏழுமலை என்பவரை திருமணம் செய்துகொண்டேன். என் கணவர் என்னிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தார். மேலும், வேறு பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு என்னை துன்புறுத்தினார். மேலும், கர்ப்பமாக இருந்த நிலையில், கருவை கலைத்து கொடுமை செய்தார். மேலும், திருமண மண்டபம் கட்ட பணம் வேண்டும் என்று கூறி ₹15 லட்சத்தை பெற்றுக்கொண்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெளியூர் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே, கருக்கலைப்பு செய்ததுடன், ₹15 லட்சத்துடன் மாயமான கணவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இதையடுத்து, ஊட்டியில் நடந்த தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற வேலூர் கலெக்டர் அலுவலக உதவியாளர் ரவிக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் வாழ்த்து தெரிவித்தார்.

Tags : abortionist husband ,
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...