×

வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த 5 பேர் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூர், நவ.12: வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதித்து சுற்றித்திரிந்த 5 பேர் நேற்று திருப்பத்தூரில் உள்ள மாவட்ட மறுவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் கிழிந்த, அழுக்கு சட்டைகளுடன், உணவின்றி ஆங்காங்கே சாலையில் சுற்றித் திரிவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கலெக்டர் உடனடியாக மனநலம் பாதித்தவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க மாற்றுத்திறனாளி துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று திருப்பத்தூர் மனநலம் பாதிக்கப்பட்டவர் மறுவாழ்வு இல்ல இயக்குனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் வேலூர் மாவட்ட பகுதிகள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆம்பூர் பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க பாஷா, வேலூர் கொணவட்டம்  மேம்பாலம் அடியில் பெயர், ஊர் தெரியாத ஆதரவற்ற நிலையில் திரிந்துகொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்,  வேலூர் சத்துவாச்சாரி கங்கையம்மன் கோயில் அருகே சுற்றித்திரிந்து கொண்டிருந்த 35 வயது மதிக்கதக்க வாலிபர், குடியாத்தம் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த விஜயலட்சுமி (40), திருப்பத்தூர் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பிரியா(25) ஆகியோரை அதிகாரிகள் பிடித்தனர்.

பின்னர், அவர்கள் 5 பேரையும் பாகாயத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்று  பரிசோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, 5 பேரையும் அவர்களின் மருத்துவ அறிக்கையை கொண்டு திருப்பத்தூர் சப்-கலெக்டர் வந்தனா கார்க் முன்னிலையில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்கள் 5 பேரையும் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட மன நல காப்பக மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த 3 ஆண்கள், 2 பெண்கள் உட்பட 5 பேரை திருப்பத்தூரில் உள்ள மாவட்ட மனநல காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags : persons ,Vellore district ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5...