வாகனம் மோதி சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

ஆற்காடு, நவ. 12: ஆற்காடு கஸ்பா பகுதியில்  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் அலுவலகம், தாசில்தார் குடியிருப்பு, அதற்கு பக்கத்தில் ஆர்ஐ அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்  அலுவலகம் ஆகியவை உள்ளது. மேலும் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் அரசின் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் உள்ளது. மேற்கண்ட  அலுவலகங்களுக்கு ஆற்காட்டைச்  சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது  தேவைகளுக்காகவும்,  பல்வேறு சான்றுகள் பெறுவதற்கும் வந்து செல்கின்றனர். மேலும்,  இந்த அலுவலகங்கள் வழியாகத்தான் தாலுகா அலுவலகம், நீதிமன்றம், துணை கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு கண் மருத்துவமனை போன்றவற்றிற்கு பொதுமக்கள் செல்கின்றனர். இதனால் இந்த பகுதி  எப்போதும் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில், ஆர்ஐ அலுவலகத்தின் முன்புறம் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பத்திலிருந்து அப்பகுதியை சேர்ந்த கடைகளுக்கும், வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக  மின்கம்பத்தில் அடி பாகத்திலும் மத்தியிலும் சேதம் ஏற்பட்டு உடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற அடையாளம் தெரிய வாகனம் மோதியதால் இந்த சேதம் அடைந்ததாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் எந்த நேரத்திலும் அந்த கம்பம் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. அப்படி உடைந்து விழும் பட்சத்தில் அந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கும், ஆர்ஐ அலுவலகம், விஏஓ அலுவலகத்திற்கு  வரும் பொதுமக்களுக்கும்  பெரும் பாதிப்பு  ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்துள்ள அந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற  மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: