×

உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் முதலாளிக்கு கத்திக்குத்து

திருப்பத்தூர், நவ.12: திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் முதலாளியை கத்தியால் குத்திய சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் தியாகி சிதம்பரநாதன் தெருவை சேர்ந்தவர் ரவி(55). இவர் திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள நகராட்சி வணிக வளாகத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், திருப்பத்தூர் எல்ஐசி அலுவலகம் பின்புறம் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த பிரதாப்(33) என்பவர் ரவியின் ஓட்டலில் நேற்று மதியம் சாப்பிட்டார். பின்னர், அதற்கான பணத்தை தரும்படி ரவி கேட்டாராம். அதற்கு பிரதாப், நான் ஏற்கனவே பணம் கொடுத்துவிட்டேன் என்று கூறினாராம். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரதாப் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து ஓட்டலுக்கு வந்து அங்கிருந்த ரவியை திடீரென கத்தியால் சரமாரியாக வயிறு மற்றும் கைகளில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் அலறியபடி கூச்சலிட்டார்.

இதைப்பார்த்ததும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஓட்டல் ஊழியர்கள் பிரதாப்பை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  மேலும், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ரவியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர். பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் ஓட்டல் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கஞ்சா விற்பனையால்
அதிகரிக்கும் கொலை, கொள்ளை
திருப்பத்தூர் நகரப்பகுதியில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கொண்டு வந்து விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அடிமையாகி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க வேண்டிய நகர போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, திருப்பத்தூர் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் கஞ்சா விற்பனையை உடனடியாக தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர்...