×

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு

வேலூர், நவ.12: வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதை தொடர்ந்து அனைத்து கட்சியினர் முன்னிலையில் நேற்று மாதிரி வாக்குப்பதிவை கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். தமிழகத்தில் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு அனைத்து பணிகளும் செய்து முடிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான பணிகள் அந்தந்த மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சோதனை நடந்து வருகிறது. அதாவது, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இப்பணியில் பெங்களூர் பெல் நிறுவன பொறியாளர்கள் குழு ஈடுபட்டது. முதலில் வேலூர் பிடிஓ அலுவலகத்தில் இருந்த 1,824 கட்டுப்பாட்டு கருவிகளும், 3,051 வாக்குப்பதிவு இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி, 9ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதில் 6121 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3131 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 9252 இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலூர் பிடிஓ அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்புலட்சுமி, 2வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன், பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர் குழு தலைவர் காவிரிபரித் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த 6121 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3131 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 9,252 இயந்திரங்கள் சரி பார்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து மொத்த இயந்திரங்களின் எண்ணிக்கையில் 5 சதவீதம் இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.இதில் வேலூர் பிடிஓ அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களில் இருந்து சுழற்சி முறையில் 90 இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஒவ்வொரு இயந்திரத்திலும் தலா 1000 வாக்குகள் பதிவு செய்யப்படுகிறது. பின்னர், அனைத்து கட்சியினர் முன்னிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.

அதில் ஏதேனும் குளறுபடி இருந்தால் அதனை சரி செய்யும் பணி நடைபெறும் அல்லது அந்த இயந்திரத்திற்கு பதிலாக வேறு இயந்திரம் பயன்படுத்தப்படும். மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து 60 வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நாளை (இன்று) நடக்கிறது. இவற்றில் தலா 1000 வாக்குகள் பதிவு செய்யப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும் ரேண்டம் முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்புவதற்கான பணிகள் நடைபெறும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேலிடத்தில் இருந்து தகவல் வந்ததும் பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : elections ,
× RELATED வேலூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 1,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன