இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் மோசடி சிவந்திபுரம் ஊராட்சியை பெண்கள் முற்றுகை

வி.கே.புரம், நவ.12: தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கக்கோரி சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் சார்பில் ஊராட்சி பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ்            உள்ளவர்களுக்கு இலவசமாக 4 ஆடுகள் மற்றும் ஆடுகள் வளர்ப்பதற்கு தங்குமிடம் கட்டுவதற்காக ரூ. 2500 வழங்கப்படுகிறது. சிவந்திபுரம் ஊராட்சியிலும் இலவசமாக ஆடுகள் வழங்கும் திட்டத்திற்காக கடந்த மாதம் ஊராட்சி சார்பாக 1950 மனுக்கள் வாங்கப் பட்டன.  இதில் தேவையான 273 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஆடுகள் வழங்குவதற்கான டோக்கன் கடந்த 9ம் தேதி வழங்கப்பட்டு விட்டது. விரைவில் இவர்களுக்கு மட்டும் இலவச ஆடுகள் மற்றும் பணம் வழங்கப்பட உள்ளது. இதனையறிந்த சிவந்திபுரம் அம்மன் கோவில் தெரு, ஆறுமுகம்பட்டி, புலவன்பட்டி, உதிமுத்தன்பட்டி, கஸ்பா பகுதிகளைச் சார்ந்த பெண்கள் தாங்கள் தான்  உண்மையான தகுதியுள்ள பயனாளிகள் என்றும் தங்களுக்கு ஆடுகள் வழங்க வேண்டும் என்றும் கூறி முன்னாள் கவுன்சிலர் அன்பு வேதமணி மற்றும் ஊர்த்தலைவர் இஸ்ரேல் தலைமையில் சிவந்திபுரம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அம்பை யூனியன் அலுவலகம் சென்று பிடிஒவிடம் தங்கள் கோரிக்கையை தெரிவித்தனர்.

 இதுகுறித்து சிவந்திபுரம் ஊராட்சி ஊழியர்கள் கூறுகையில், நாங்கள் மனுக்களை மட்டுமே பொதுமக்களிடமிருந்து வாங்கிக் கொடுப்போம். ஆனால் ஆடுகள் வழங்க வேண்டிய பொறுப்பு டாக்டர்கள் குழு தான் முடிவு செய்யும் என்றனர். முன்னாள் கவுன்சிலர் அன்பு வேதமணி கூறும் பொழுது, ஆளும் கட்சியினரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆடுகள் வழங்கப்பட உள்ளது. வருமானமே இல்லாத தகுதியுள்ள விதவைகளுக்குக்கூட வழங்கப்படவில்லை. இத்திட்டம் மூலம் கடந்தாண்டு ஆடுகள் வழங்கியவர்களுக்கும் இந்தாண்டும் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் பெரும் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

Related Stories: