போலீஸ் வாகனம் மோதியதில் மேலும் ஒரு பெண் பலி

கடையநல்லூர், நவ. 12:  நெல்லை மாவட்டம், கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி ஆயிஷாள் பீவி என்ற மல்லிகா (36), மகள் ஆஷிகா (15), அதே பகுதியைச் சேர்ந்த தீன்ஒலி மகள் கன்சாள் மஹரிபா (40) ஆகியோர் கடந்த 9ம் தேதி திரிகூடபுரத்திலிருந்து சொக்கம்பட்டிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தனர்.  அப்போது கடையநல்லூரிலிருந்து புளியங்குடி நோக்கி சென்ற ராஜபாளையம் பட்டாலியன் போலீஸ் பாதுகாப்பு ரோந்து பேருந்து எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திரிகூடபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை இடித்ததை தொடர்ந்து பேருந்தின் டயர் வெடித்து அங்கு நின்ற பயணிகள் மீது மோதி மரக்கிளையின் உரசியவாறு நின்றது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து போலீஸ் ரோந்து பேருந்தில் படுகாயமடைந்து சிக்கியிருந்த ஆயிஷாள் பீவி, ஆஷிகா மற்றும் கன்சாள் மஹரிபாவை மீட்டு கிசிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ஆயிஷாள் பீவி பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த ஆஷிகா மற்றும் கன்சாள் மஹரிபா ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கன்சாள் மஹரிபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. ஆஷிகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மதுஅபூபக்கர், படுகாயமடைந்த கன்சாள்மஹரிபா பலியான செய்தி கேட்டு இரங்கல் தெரிவித்துடன், நெல்லை அரசு மருத்துவமனை டீனை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்று வரும் ஆஷிகா மீது தாங்கள் நேரடி பார்வையில் தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் தென்காசி கோட்டாட்சியர் மற்றும் தாசில்தாரை தொடர்பு கொண்டு பலியான கன்சாள்மஹரிபா குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொண்டார்.

Related Stories: