கடையத்தில் சார் பதிவாளர் இல்லாததால் பத்திரப்பதிவு செய்வதில் தொடரும் தாமதம்

கடையம், நவ.12:  கடையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 5 மாதங்களாக சார் பதிவாளர் இல்லாததால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.கடையம் ராமநதி அணை செல்லும் சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட 23 ஊராட்சியில் உள்ள மக்கள் மற்றும் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் உள்ள மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த அலுவலகத்தில் திருமண பதிவு, பத்திரபதிவு, சங்கபதிவு உள்பட  நாள்தோறும் 30 முதல் 40 வரையிலான பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக இருந்தவர் கடந்த ஜூலை மாதம் பதவி உயர்வு பெற்று நெல்லை சென்றார். அதன்பின் 5 மாதமாகியும் கடையத்திற்கு சார் பதிவாளர் நியமிக்கபடவில்லை. இங்குள்ள உதவியாளர் தான் பொறுப்பாக செயல்பட்டு வருகிறார்.   சார் பதிவாளர் இல்லாததால் ஒரு பத்திரம் பதியவே ஒரு நாள் முழுவதும் பொதுமக்கள் காத்திருக்க நேரிடுகிறது. இதனால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த அலுவலகத்திலுள்ள பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடும் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரிகிறது. சார் பதிவாளர் அலுவலக வாசலில் நேற்று காலையில் வழியை அடைத்தார் போல் ஒரு கார் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் உள்ளே சென்று வர சிரமப்பட்டனர். இந்த காரை ஒதுக்கி விட சொல்வதற்கு கூட ஆளில்லாமல் நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறது.  எனவே கடையம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு விரைவில் சார் பதிவாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: