ஆலங்குளம் அருகே நிலவியல் ஓடை தூர்வாரி சீரமைப்பு

நெல்லை, நவ. 12:  ஆலங்குளம் அருகே நெடுங்காலமாக தூர்ந்திருத்த நிலவியல் ஒடையை இரண்டே நாட்களில் தூர் வாரி சீரமைத்து பாசன வசதி ஏற்படுத்திய கலெக்டரை விவசாயிகள் பாராட்டினர். ஆலங்குளம்  தாலுகா, கீழப்பாவூர் - ‘2’ கிராமத்திலிருந்து கழுநீர்குளம் வரை உள்ள  நிலவியல் ஓடை என்றும் பட்டா ஒடை நீண்ட ஆண்டுகளாக தூர்ந்து பயனற்று  இருந்தது. இதனால் பாசன வசதியில்லாமல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும்,  கடம்பன் குளத்திலிருந்து வரும் மழைநீர் வீணாகிறது எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற கலெக்டர் ஷில்பா, உதவி கலெக்டர் பயிற்சி பெறும் சிவகுரு பிரபாகரன் தலைமையில் ஆலங்குளம் தாசில்தார் உள்ளிட்ட அலுவலர்களை குழுவாக அழைத்து தூர் வார உத்தரவிட்டார். இந்த நிலவியல் ஒடை 1 கி.மீ தூரத்திற்கு ஆக்ரமிப்புகளை அகற்றி தூர் வாரி சரி செய்து வழங்கப்பட்டது.

இதன்  மூலம் கடம்பன் குளத்திற்கு வரும் தண்ணீர் வீணாகாமல் ஆனந்த புதுகுளம் வரை  தடையின்றி சென்று பல ஹெக்டேர் நீர்பரப்பு பாசன வசதி பெற்று விவசாயிகள்  பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆலங்குளம் தாலுகா, கழுநீர்குளத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பிஆர்ஓ செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: