×

நில ஆக்கிரமிப்பு அகற்றி மயானம் அமைக்க கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, நவ. 12: ஓடை புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றிமயானம் அமைத்துத்தரக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை கங்கன்குளம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். கோவில்பட்டி அருகே  கங்கன்குளம் கிராமத்தில் ஓராண்டுக்கு மேலாக தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிரந்தர மயான வசதி இல்லை. இதனால், இறந்தவர்களின் உடல்களை தற்போது இங்குள்ள ஓடை புறம்போக்கு ஓடையின் கரையில் அடக்கம் செய்யும் அவலம் தொடர்கிறது. இதனிடையே மழை காலங்களில் ஓடையில் தண்ணீர் வரும்போது,  இறந்தவர்களின் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் முடியாமல்  அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ஓடை புறம்போக்கு நிலத்தில் காணப்படும் தனிநபர்களின்  ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அவ்விடத்தில் நிரந்தரமாக மயானம் அமைத்துத்தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் பலனில்லை.
இதனால் ஆவேசமடைந்த கங்கன்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள், புதிய தமிழகம்  கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் லாசர் தலைமையில் கோவில்பட்டி ஆர்டிஓ  அலுவலகத்திற்கு திரண்டுவந்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
இதில் கிழக்கு ஒன்றியச்  செயலாளர் வேல்முருகன், வர்த்தக அணி செயலாளர் குழந்தைவேலு, இளைஞர் அணி  மாவட்டச் செயலாளர் கிரிபாலா, கங்கன்குளம் கிளைச் செயலாளர்கள் தங்கசாமி, ராஜபூபதி,  முருகன், மைக்கேல் மற்றும் கிராம மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் கோரிக்கை மனுவை ஆர்டிஓ விஜயாவிடம் அளித்து சென்றனர்.

Tags : Kovilpatti RTO ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் நூதன போராட்டம்