புழுதிப்படலமான தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை

தூத்துக்குடி, நவ. 12: தெற்கு ஆத்தூர் பஜார் வியாபாரிகள்  சங்கத்தினர், ஆத்தூர் வியாபாரிகள் சங்கத்தினர் தனித்தனியாக கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த மனுக்கள் விவரம்: தூத்துக்குடியையும், திருச்செந்தூரையும்  இணைக்கும் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று  வருகின்றன. ஆத்தூர் வடக்கு பஜார் பகுதியில் இருந்து தெற்கு ஆத்தூர்  குளக்கரை வரையிலும் இந்த தார் சாலையானது பழுதாகி குண்டும் குழியுமாக இருந்தது.

 இதனிடையே அண்மையில் திருச்செந்தூரில் நடந்த கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, குண்டும்,குழியுமாக இருந்த பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் கல்குவாரிகளிலுள்ள கழிவுமண் மற்றும் ஜல்லிக்கற்களை  பெயரளவுக்கு போட்டு சரிசெய்து சென்றனர். ஆனால், நிரந்தரமாக தீர்வு காணவில்லை. இதனால் இச்சாலை வழியாக வாகனங்கள் செல்லும்போது  மிகப்பெரிய அளவில் புழுதிப்படலம் ஏற்படுகிறது.

 இதனால், இங்கு நடந்துசெல்லும் மாணவர்கள், பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், பஸ்களில் செல்வோர் என என அனைத்துத்தரப்பினரும் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி பெரிதும் அவதிப்படுகிறோம். மேலும் இந்த  புழுதிப்படம் சாலையோர கடைகளின் உள்ளே வந்து படிவதால்  வியாபாரிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இனியாவது இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, விரைவில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுக்களில் வலியுறுத்தியுள்ளனர்.

கடையடைப்பு ஒத்திவைப்பு

ஆறுமுகநேரி: ஆத்தூரில் சாலை சீரமைப்பை வலியுறுத்தி நாளை (13ம் தேதி) நடத்தவிருந்த கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.   பராமரிப்பின்றி உருக்குலைந்த தூத்துக்குடி- திருச்செந்தூர்  சாலையில் வடக்கு ஆத்தூர், தெற்கு ஆத்தூரில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி அவசர கதியில் தூவப்பட்ட ஜல்லி கற்கள், குவாரி கழிவுத்துகள்களால் புழுதிப்படலம் உருவானது. இதை சீரமைக்க கோரி பல முறை மனுக்கள் அளித்தும் பலனில்லாததால் ஆவேசமடைந்த வியாபாரிகள் சங்கத்தினர், நாளை (13ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து  சங்கத் தலைவர் பொன். தமிழரசன் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது வியாபாரிகளை சமரசப்படுத்திய கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்துடன் சற்று கால அவகாசம் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் சங்கத்தினர், நாளை நடத்தவிருந்த கடையடைப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.  இருப்பினும் இன்னும் ஒரு வாரத்திற்குள் சாலையை சீரமைக்காவிட்டால் நவம்பர் 20ம் தேதி கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Related Stories: