ஆறுமுகநேரியில் மின்மாற்றி அமைப்பு

ஆறுமுகநேரி,  நவ. 12: ஆறுமுகநேரியில் மின்வாரியத்தினர் கழற்றிச் சென்ற மின்மாற்றி,  தினகரன் செய்தி எதிரொலியாக பொருத்தப்பட்டுள்ளது. ஆறுமுகநேரியில் கே.டி.கோசல்ராம்  திருமணமண்டபத்திற்கு மேல்புறம், சோமசுந்தரியம்மன் கோவில் தெருவில்  250 கே.வி. திறன்கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த இருமாதங்களுக்கு முன்னர் ஆறுமுகநேரி செல்வராஜபுத்தில் இருந்த மின்மாற்றி பழுதானது. இதையடுத்து சோமசுந்தரியம்மன் கோவில் தெருவில் இருந்த மின்மாற்றியை மின்வாரியத்தினர் கழற்றிச் சென்று அங்கு  பொருத்தினர். ஆனால் சோமசுந்தரியம்மன் கோவில் தெருவில் உள்ள  மின்மாற்றியை பொருத்தாமல் இரு மாதங்களுக்கு மேலாக ஆறுமுகநேரி சந்தைக்கு  பின்புறம் உள்ள மினமாற்றியுடன் இணைத்தனர். இதனால் ஏற்பட்ட அதிக மின்னழுத்தம்  காரணமாக மின்மாற்றி சூடானதோடு அடிக்கடி மின்தடையும் உருவானது.

 இதனால் பாதிப்புக்கு உள்ளான மக்கள், சோமசுந்தரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்மாற்றியை உடனடியாக பொருத்தி  அப்பகுதிமக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 9ம் தேதி படத்துடன் தினகரனில் வெளியானது. இதையடுத்து இதுவிஷயத்தில் தலையிட்ட மின்வாரிய அதிகாரிகள், சோமசுந்தரியம்மன் கோவில் தெருவில் கழற்றி கொண்டுசென்ற மின்மாற்றியை  உடனடியாக நேற்று காலை கொண்டுவந்து மீண்டும் பொருத்தினர்.  இதனால் இப்பகுதியில் மின் விநியோகம்  தற்போது சீரானது. இதை வரவேற்றுள்ள மக்கள், நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: