×

சாலை பராமரிப்பை அரசே மேற்கொள்ள வேண்டும்

கோவில்பட்டி, நவ. 12: சாலை  பராமரிப்பை தனியாரிடம் வழங்காமல் அரசே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என சாலைப் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அச்சங்கத்தின் சார்பில் கோவில்பட்டியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில்  தூத்துக்குடி மாவட்ட 7வது பேரவை ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்  பரணிதரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்டாரத் தலைவர் சுப்பிரமணியன்  கூட்டத்தைத் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்டச் செயலாளர்  ஹரிபாலகிருஷ்ணன் வேலை திட்ட அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் திருமணி  வரவு செலவு அறிக்கை வசித்தார். அரசு ஊழியர் சங்க வட்டாரச் செயலாளர் கோவிந்தன் சிறப்புரையாற்றினார், கூட்டத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத  பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இறந்து  போன சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி கருணை அடிப்படையில் பணி  வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் வழங்காமல் அரசே  தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், சாலைப் பணியாளர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா