×

விவசாயிகள், மகளிர்சுய உதவிக்குழுவினர் உள்பட 125 பேருக்கு ரூ.71.07 லட்சம் கடன்

தூத்துக்குடி, நவ. 12:  ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா மற்றும் உறுப்பினர் கல்வித் திட்ட விழா நடந்தது. இதற்குத் தலைமை வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவரும், ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவருமான சின்னத்துரை, 2 மகளிர் சுயஉதவிக்குழு கடன், 4 உழவர் காசு கடன் என விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 125 பேருக்கு ரூ.71.07 லட்சம்  கடனுதவிகளை வழங்கினார். இவற்றுக்கான காசோலைகளை வழங்கி அவர் பேசுகையில், ‘‘கடன்களை பெற்றுள்ள உறுப்பினர்கள், பொருளாதார தரத்தை உயர்த்துவதோடு கடன்களை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தி சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மேலும் தற்போது பருவமழை துவங்கி விவசாய பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதால் பயிர்க்கடனும், விவசாயத்திற்கான உரமும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சங்கங்களில் உரத்தட்டுப்பாடு நிலவினாலும், நமது சங்கத்தில் உரங்கள் போதுமான அளவுக்கு இருப்பு உள்ளன. பயிர்க்கடனும் கூட்டுப்பொறுப்புக்குழு கடனும் உரிய காலத்திற்குள் திரும்பி செலுத்திவிட்டால் வட்டியை திரும்பச்செலுத்த வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

 சங்கமானது 1927ம் ஆண்டு முதல் சேவை தொடங்கப்பட்டு 5 கிராம விவகார எல்லையில் 1420 (அ) உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டுவருகிறது. மேலும் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் 31ல் ரூ. 4.76. கோடி கடன் நிலுவையும், கடந்த ஆண்டு மார்ச் 31ல் ரூ. 3.67 லட்சம் நடப்பு லாபத்திலும் செயல்பட்டு வருகிறது. சங்க கட்டட நவீனமயமாக்கலுக்கு ரூ.25 லட்சமும், கிட்டங்கி கிடங்கு சேவை அமைக்க ரூ.25 லட்சமும் அரசால் வட்டியில்லா கடனாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குநர் அந்தோணிபட்டுராஜ், கூட்டுறவு சங்கங்களின் நோக்கம், அதன் பயன்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினார். சங்க துணைத்தலைவர் சேகர், சங்கச் செயலாளர் ஐயம்பாண்டி, காசாளர் ஆனந்தராமன், கிளை மேலாளர் முத்து கிருஷ்ணகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களும், சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Tags :
× RELATED சுயதொழில் துவங்க மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம்