தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை

தூத்துக்குடி, நவ. 12: தூத்துக்குடி முத்தையாபுரம்  பகுதியில்  சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து முத்தையாபுரம் பகுதி மக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மண்டல இளைஞர் பாசறை செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்டோர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த  மனு விவரம்: முத்தையாபுரம் பகுதிகளில் சமீப காலமாக கூர்மையான ஆயுதங்களால்  பெண்களிடம் நகைபறிக்கும் கொடூர சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால்  பெண்கள், பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இப்பகுதியில் மதுக்கடைகள் மற்றும் கஞ்சா விற்பனை காரணமாக குற்றச்செயல்கள்  அதிகரித்து வருகின்றன.  எனவே, இதுபோன்ற குற்றச் செயல்களை தடுக்க மதுக்கடைகளின்  எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க வேண்டும். முத்தையாபுரம்  பகுதியில்  சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும். குறிப்பாக, கஞ்சா விற்பவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தூத்துக்குடியைச் சுற்றியுள்ள தனியார்  மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வடமாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு  அளிப்பதால் உள்ளூர் வாசிகளின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு பெருகி  வரும் குற்றச் செயல்களுக்கு இதுவும் ஒரு காரணமாகத் திகழ்கிறது. எனவே, உள்ளூர்  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மாவட்ட  நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: