சாலை விரிவாக்க பணியில் பாரபட்சம் அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகை

எட்டயபுரம், நவ. 12: எட்டயபுரத்தில் சாலை விரிவாக்கப் பணியில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் கூறிய வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.  எட்டயபுரத்தில் இருந்து நடுவிற்பட்டி செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை, துவக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, நூலகம், வங்கிகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. முறையாகப் பராமரிக்கப்படாததால் இச்சாலை கடந்த சில ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உருக்குலைந்தது. இதுகுறித்து தினகரனில் தொடர்ந்து செய்திகள் வெளியாகின. அத்துடன் அனைத்துக்கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாலையை விரிவாக்கம் செய்து புதிதாக சாலை அமைக்கும் பணி துவங்கியது. சாலை விரிவுபடுத்தும் பணிக்காக சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.  ஆனால், இவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர். இருந்தபோதும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்கப்பட்டது.  மேலும் எட்டயபுரத்தில் இருந்து நடுவிற்பட்டி வரையிலான சுமார் 1 கி.மீ. சாலை அமைக்கப்பட்டதோடு சாலையின் இருபுறமும் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கப்பட்டது. அந்த வாறுகால் சாலையின் ஆரம்பம் முதல் கடைசி வரை அமைக்காமல் அரசு மருத்துவமனையில் இருந்து சிறிது தொலைவும், பட்டத்து விநாயகம் கோயிலில் இருந்து சிறிய தொலைவு பழைய வாறுகாலையே சற்று உயர்த்தியும் அமைத்தனர். மேலும் இதையடுத்து சாலை ஓரங்களை சரிபடுத்தாமல் எஞ்சிய பகுதியில் வாறுகால் அமைக்காமலும் பணிகளை கிடப்பில் போட்டனர்.

 இதனிடையே கடந்த மாதம் பெய்த கனமழையில் பெருக்கெடுத்த தண்ணீர் சாலையோரமாக நாட்கணக்கில் தேங்கிநின்று வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அதிக அளவில் சிரமத்தை கொடுத்தது. இதை பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை.  இதனால் இனிமேல்  சாலைப்பணி நடக்குமா? என்ற சந்தேகத்தில் பழைய மாதிரியே மீண்டும் சாலையோரம் சரள் மண் நிரப்பி கடையின் முன்பகுதியில் ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

 இந்நிலையில் நேற்று திடீரென வந்த ஒப்பந்தகாரர்கள் சாலை ஓரம் பேவர் பிளாக் கல் பதிக்கப்போகிறோம் என்றதோடு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூறினர் இதனால் வியாபாரிகள் எந்த தகவலும் தெரிவிக்காமல் ஒப்பந்தக்காரர்கள் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றகூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து எட்டயபுரம் பேரூராட்சி செயல்அலுவலர் கணேசன், சுகாதாரஆய்வாளர் பூவையா, மற்றும் அலுவலக பணியாளர்கள் அங்கு சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் ஒரு சில வியாபாரிகள் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றவில்லை என்றும் சாலையின் பாதிபகுதியில் தான் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் வாறுகால் அமைத்த பகுதியில் தான் பேவர்பிளாக் பதிக்கப்படுகிறது. என்றும் எனவே ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒருகண்ணில் வெண்ணெய் என்ற ரீதியில் அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக கூறி வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மேலும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு சென்ற எட்டயபுரம் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ராஜா அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்த வியாபாரிகள் கலைந்து சென்றனர்.பின்னர் எட்டயபுரம் சப்இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மற்றும் போலீசார் உதவியுடன் சாலை ஓரத்தில் பேவர்பிளாக் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: