×

ஹோட்டல் மாஸ்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

சேலம், நவ.12:சேலம் பள்ளப்பட்டியில் ஹோட்டல் மாஸ்டரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் ஜோதிநகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (42). இவர், சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பிரபல தியேட்டரின் வளாகத்தில் இருக்கும் ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். அதே ஹோட்டலில், சேலம் அழகாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த நவீன் (எ) நவீன்குமார் (31), வேலை பார்த்தார். நேற்று முன்தினம், சமையல் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பாத்திரத்தை எடுக்கும்படி நவீனிடம் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், நவீன் மற்றும் அவரது நண்பரான மெய்யனூர் இட்டேரிரோட்டை சேர்ந்த மாதேஷ் (எ) மாதேஸ்வரன் சேர்ந்து பன்னீர்செல்வத்தை சரமாரியாக தாக்கினர். இரும்பு சேரை கொண்டு தலையில் தாக்கியதில், மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே அங்கிருந்த இதர ஊழியர்கள், தகராறை விலக்கிவிட்டு, பன்னீர்செல்வத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பள்ளப்பட்டி எஸ்ஐ முரளி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாஸ்டர் பன்னீர்செல்வத்தை தாக்கிய நவீன் (31), மாதேஷ் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது