வீரகனூரில் கோஷ்டி தகராறு கைது படலத்தால் மீண்டும் மோதல் அபாயம்

கெங்கவல்லி, நவ.12:  வீரகனூரில் கோஷ்டி தகராறில் கைது படலத்தால் மீண்டும் மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் குவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீரகனூர் கிழக்கு வீதியில் பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் சுந்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கடந்த 6ம் தேதி நில அளவீடு பணி நடைபெற்றது. இதுதொடர்பாக இருதரப்பினரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. சுந்தர் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி, பாதுகாப்பு கேட்டு வீரகனூர் காவல் நிலையத்தில் முறையிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த 9ம் தேதி இரவு எதிர்தரப்பினர் வீடு புகுந்து சுந்தரை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், எதிர்தரப்பைச் சேர்ந்த அந்தோணியம்மாள், வடிவேலு, சந்தோஷ், சதீஷ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், அந்தோணியம்மாள் அளித்த புகாரின் பேரில், சுந்தர், கருப்பையா, அலெக்சாண்டர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினம், சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று அந்தோணியம்மாள் புகாரில் குறிப்பிட்டிருந்த வீரகனூர் நத்தக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் அலெக்சாண்டர்(23), வீரகனூரைச் சேர்ந்த தாண்டவன் மகன் ரவிச்சந்திரன்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.  இந்த கைது படலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பேத்கர் நகரில் ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

Related Stories: