×

சின்னவெங்காய பயிரில் நோய் தாக்குதல் அதிகரிப்பு

நாமக்கல், நவ.12:நாமக்கல் மாவட்டத்தில் சின்னவெங்காய பயிரில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது குறித்து, நேற்று தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் எம்பி சின்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர், எருமப்பட்டி, மோகனூர், மல்லசமுத்திரம் மற்றும் நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் 3,215 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், வெங்காய பயிரில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதலினால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி அரசு முதன்மை செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையருக்கு, நாமக்கல் எம்பி சின்ராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று, சென்னை தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் புதுச்சத்திரம், ராசிபுரம், மல்லசமுத்திரம் ஆகிய வட்டாரங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வயலில், நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் எம்பி சின்ராஜூம் உடன் சென்றார்.

 வெங்காய பயிரில் பரவி வரும் இந்நோயை கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ் புளோரசன்ஸ் போன்ற உயிர் பூஞ்சான கொல்லிகளும் மற்றும் ரசாயன பூஞ்ஞான கொல்லிகளின் உபயோகம் பற்றியும், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் நோய் தாக்குதலுக்கு உள்ளான பயிர் மாதிரியினை சேகரித்து, சோதனைக்காக விஞ்ஞானிகள் எடுத்துச் சென்றனர். நோய் தாக்குதலுக்கு உள்ளான வெங்காய பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் விவரங்களை கணக்கெடுக்கும் பணி, தோட்டக்கலைத் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று (12ம் தேதி) முதல் அனைத்து வட்டாரங்களிலும், கிராமம் வாரியாக நேரடியாக விவசாயிகளை சந்தித்து, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து...