×

அளவு மீறும் சாயப்பட்டறைகளுக்கு தினம்தோறும் ₹5 ஆயிரம் அபராதம்

பள்ளிபாளையம், நவ.12: அனுமதி பெறப்பட்ட அளவை விட அதிகப்படியாக சாயமிடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிறுவனத்துக்கு தினம் ₹5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்படுமென மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சாயப்பட்டறை ஒழுங்காற்று கூட்டம் நேற்று நடைபெற்றது. மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பறக்கும்படை பொறியாளர் சாமிநாதன் தலைமை தாங்கி பேசினார். உதவி பொறியாளர் செல்வகுமார், சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் கந்தசாமி மற்றும் 53 சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன் பேசியதாவது: சமயசங்கிலி மற்றும் களியனூர் பகுதியில் அனுமதி பெற்று அமைக்கப்பட்ட 2 சாயப்பட்டறைகளில், அனுமதி வழங்கப்படும் முன்பே இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அனுமதி பெறப்பட்ட சாயப்பட்டறைகளில் காற்று ஏற்றும் தொட்டி தொடர்ந்து இயங்குவதை கண்காணிக்க, அங்கு துணை மீட்டரை உடனடியாக பொறுத்த வேண்டும்.     வாடகை சாயப்பட்டறை உரிமையாளர்களும், சாயப்பட்டறை நடத்துவோர்களும் தங்களுக்குள் கலந்து பேசி வாடகை மற்றும் வெளியேற்றப்படும் கழிவுநீரின் அளவை முடிவு செய்து கொள்ள வேண்டும். வெளியேற்றும் கழிவுநீரின் அளவை மீறி இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால், சாயப்பட்டறை உரிமையாளருக்கு, தினமும் ₹5 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படும். வாடகைக்கு சாயமிடும் பணியை மேற்கொண்டிருந்தாலும், சாயப்பட்டறையின் உரிமையாளர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள சாயப்பட்டறைகள் கால மாற்றத்திற்கு ஏற்ப, புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை பயன்படுத்தி சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு