ஆன்லைன் கலந்தாய்வில் தொடரும் ஆச்சர்யம் 6 தலைமை ஆசிரியர்களுக்கு அருகாமை பள்ளிகளுக்கு மாறுதல்

நாமக்கல், நவ.12: நாமக்கல்லில் நேற்று அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் இடமாறுதல் அளிக்கும் கலந்தாய்வு, முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையில் நடைபெற்றது. பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி கலந்தாய்வை நடத்தினார். இந்த கலந்தாய்வில், நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 18 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் ஆன்லைனில் காட்டப்பட்டது. கடந்த காலங்களில் குறிப்பிட்ட பள்ளிகள் ஆன்லைனில் மறைக்கப்படும். ஆனால், கடந்த 2 ஆண்டாக காலிப்பணியிடம் அனைத்தும் ஆன்லைனில் காட்டப்பட்டு வருகிறது. இதைப்பார்த்து தலைமை ஆசிரியர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இதையடுத்து, கலந்தாய்வில் கலந்து கொண்ட 6 தலைமை ஆசிரியர்களும், தங்கள் வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்தனர். குமாரபாளையம் பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா அத்தனூருக்கும், செவந்திப்பட்டி குணசேகரன் புதுசத்திரத்திற்கும், வெப்படை செல்வராஜ் எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளிக்கும், வெண்ணந்தூர் ஆண்கள் பள்ளி முத்துசாமி, சேந்தமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கும், அரியூர் புதுவளவு, பழனிச்சாமி அணியாபுரத்திற்கும், முத்துகாபட்டி வரதராஜன் ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை பள்ளிக்கும் மாறுதல் பெற்றனர். இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வழங்கினார். அப்போது டிஇஓ உதயக்குமார் உடனிருந்தார்.

வெண்ணந்தூர் முத்துசாமி, முத்துக்காப்பட்டி வரதராஜன் இருவரும், ஏற்கனவே முதுகலை ஆசிரியராக பணியாற்றிய பள்ளிகளுக்கே மாறுதல் பெற்றுள்ளனர். இதுபோல வெப்படை செல்வராஜூக்கு, தற்போது அவர் வசித்து வரும் நாமக்கல்லுக்கு அருகாமையில் உள்ள பள்ளியே கிடைத்துள்ளது. இந்த ஆண்டு, ஒரே பள்ளியில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே, மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என விதிமுறை கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் இவர்கள் 3 பேரும், நீதிமன்றம் சென்று கலந்தாய்வில் கலந்து கொண்டு அருகாமை பள்ளியை பிடித்துள்ளனர். உள்மாவட்ட மாறுதலை தொடர்ந்து, வெளி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் வெளி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 2 தலைமை ஆசிரியர்கள், நாமக்கல் மாவட்ட பள்ளிகளை தேர்வு செய்து கொண்டனர். இரவில்,  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும் நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் உள் மாவட்டத்திலேயே பதவி உயர்வு பெற்றனர். இன்று (12ம் தேதி) உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.

Tags : Surprise ,schools ,head teachers ,
× RELATED நிலக்ேகாட்டை அருகே பரபரப்பு: நத்தத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்