×

விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி ஆசிரியர் பட்டய பயிற்சி மாணவிகள் புகார்

நாமக்கல், நவ.12: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு, தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் கலெக்டர் மெகராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் ஆசிரியர் பட்டய படிப்புக்கான முதலாம் ஆண்டு தேர்வு எழுதினோம். தமிழ், ஆங்கிலம் உள்பட 7 பாடத்திற்கான தேர்வுகள் எழுதினோம். இதற்கான முடிவுகள், கடந்த மாத இறுதியில் வெளியானது. இதில் எங்கள் பள்ளியில் தேர்வு எழுதிய யாரும், 7 பாடத்திலும் தேர்ச்சி பெறவில்லை. 2 பேர் மட்டும்  2 பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மற்ற அனைவருக்கும், அனைத்து பாடத்திலும் ஒற்றை இலக்கத்தில் தான் மதிப்பெண் கிடைத்துள்ளது.  விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி நடந்துள்ளது. அனைவரும் டிகிரி முடித்து விட்டுத்தான், ஆசிரியர் பயிற்சி  பள்ளியில் சேர்ந்து உள்ளோம்.

இதற்கு முன், இரண்டு அரசு தேர்வுகள் எழுதி, தேர்ச்சி பெற்று வந்துள்ள எங்களை, தகுதி குறைக்கும் வகையில் இது உள்ளது. ஆசிரியர் பட்டய பயிற்சி படிக்கும் 95 சதவீத மாணவ, மாணவியர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போது விடைத்தாளுக்கு மறுகூட்டல் செய்யவும் அவகாசம் முடிந்துவிட்டதாக கூறுகிறார்கள். எனவே, எங்களின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்து, சரியான மதிப்பெண் அளிக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Teacher charter training students ,answer sheet evaluation ,
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்