×

முதலைப்பட்டியில் பஸ் நிலையம் அமைக்க வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு; எம்பி ஆதரவு

நாமக்கல், நவ.12: நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, நாமக்கல் எம்பி ஆதரவு அளித்துள்ளார். அதே சமயம் நகரில் உள்ள பல்வேறு வர்த்தக சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தி நேற்று கலெக்டர் மற்றும் நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளனர். நாமக்கல் அடுத்த முதலைப்பட்டியில், ₹40 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, நகராட்சி அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்கான ஆட்சேபனையை 11ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி, நகராட்சி கமிஷனர் சுதா கடந்த மாதம் அறிவித்தார். ஆட்சேபனை தெரிவிக்க கடைசி நாளான நேற்று,  மாவட்ட அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் பெரியசாமி, நகை கடை உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சிவஞானம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஷேக்நவீத்,  செல்போன் விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் வாசுசீனிவாசன், தியாகராஜ பாகவதர் அமைப்பை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரனிடம் ஆட்சேபனை மனுவை அளித்தனர். அதன் விபரம் வருமாறு:

முதலைப்பட்டியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள  புதிய புறநகர் பேருந்து நிலையம், நகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கிறது. அந்த இடம் களிமண் பூமியாக இருப்பதால், நிரந்தர கட்டிடங்கள் கட்ட உகந்ததாக இருக்காது. இங்கு பேருந்து நிலையம் அமைந்தால், மக்களுக்கு பாதுகாப்பாக இருக்காது. ஏற்கனவே இந்த இடத்தை, கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் குமரகுருபரன் நிராகரித்தார். எனவே, மக்களுக்கு பாதுகாப்பாகவும், வியாபாரிகளுக்கு இடையூறு இல்லாத இடத்தில், பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். வள்ளிபுரம், கருப்பட்டிபாளையம் மற்றும் வள்ளிபுரம், ரயில் நிலையம் அருகே உள்ள புறம்போக்கு இடங்களில் ஒன்றை தேர்வு செய்து, பேருந்து நிலையம் அமைத்தால், அனைவருக்கும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் மெகராஜை சந்தித்து மனு அளித்தனர். மனுவை படித்து பார்த்த கலெக்டர், ரைட் பார்க்கலாம் என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

புதிய பேருந்து நிலையம் தொடர்பாக, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சங்கத்தலைவர் சின்ராஜ் எம்பி, நகராட்சி ஆணையாளருக்கு நேற்று அனுப்பிய கோரிக்கை மனு விபரம்: நாமக்கல் பேருந்து நிலையம், நகரின் மைய பகுதியில் அமைந்து உள்ளதால், போக்குவரத்து நெரிசல்  அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். புறநகர் பேருந்து நிலையம் முதலைப்பட்டியில் அமைந்தால், நாமக்கல் சுற்றுப்புற பகுதிகளில் தொழில்கள் வளர்ச்சி அடையும். அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக சென்று வரமுடியும்.  எனவே, நாமக்கல் புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணியை உடனே தொடங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோல், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியினர், நேற்று நாமக்கல் கலெக்டர் மெகராஜை சந்தித்து அளித்த மனுவில், ‘நாமக்கல்லை தனி மாவட்டமாக பிரித்து 20 ஆண்டுக்கு மேல் ஆகியும், நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே, புதிய பேருந்து நிலையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர்.புதிய பேருந்து நிலையத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நேற்று பல்வேறு தரப்பினர் நகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ரிங்ரோடு அமைத்த பிறகே புதிய பேருந்து நிலையம்: எம்எல்ஏ அறிவிப்பு
நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் கூறியதாவது: நாமக்கல் நகரில் ரிங்ரோடு அமைத்த பிறகு தான், முதலைப்பட்டியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும். ரிங்ரோடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கு முடிந்தவுடன், ரிங்ரோடு அமைக்கும் பணி நாமக்கல்லில் உடனடியாக துவங்கப்படும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ₹100 கோடியில் ரிங்ரோடு அமைக்கப்படும்  என அறிவித்திருந்தார். புதிய புறநகர் பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில் கோட்டை சாலை வழியாக சென்று பார்த்தால், புதிய பேருந்து நிலையத்தின் அவசியம் தெரியும். இவ்வாறு எம்எல்ஏ பாஸ்கர் தெரிவித்தார்.

Tags : Vendors ,bus station ,
× RELATED பிரதமரின் ஸ்வாநிதித் திட்டத்திற்கு...