×

உத்தனப்பள்ளி அருகே பயங்கரம் கார், லாரி மோதி விபத்து தீயில் கருகி டிரைவர் பலி

சூளகிரி, நவ.12: உத்தனப்பள்ளி அருகே கார், லாரி மோதிய விபத்தில், தீயில் கருகி கார் டிரைவர் பலியானார். இந்த விபத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து டிப்பர் லாரி ஒன்று, நேற்றிரவு ராயக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே போல், ராயக்கோட்டையில் இருந்து கார் ஒன்று ஓசூருக்கு சென்று கொண்டிருந்தது. ராயக்கோட்டை-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், உத்தனப்பள்ளி அருகே வந்த போது லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் டீசல் டேங்க் வெடித்ததில் காரும், லாரியும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரில் தீ கொளுந்து விட்டு எரிந்ததால், அதன் டிரைவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். லாரி டிரைவர் படுகாயமடைந்தார்.

 விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லாரி டிரைவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கார் டிரைவர் பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. இதனிடையே, ஓசூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தின் காரணமாக, ஓசூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களும், ராயக்கோட்டையில் இருந்து வரும் வாகனங்களும் சுமார் 5 கிமீ தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்