×

டூரிஸ்ட் வாகனங்களை நிறுத்த மாற்று இடம்

கிருஷ்ணகிரி, நவ.12: கிருஷ்ணகிரியில் டூரிஸ்ட் மேக்ஸிகேப் வாகனங்களை நிறுத்த மாற்று இடம் கேட்டு, கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில், டூரிஸ்ட் மேக்ஸிகேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்க நிர்வாகிகள் முருகேசன், ரமேஷ்குமார், ஹரிபாலாஜி, ஜெயசீலன், டேவிட்ஆரோக்கியராஜ், செந்தில் உள்ளிட்டோர் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய கலெக்டர், தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை ஆகியோரது அனுமதியுடன் நாங்கள் எங்களது டூரிஸ்ட் மேக்ஸிகேப் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம்.

இந்நிலையில், வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகில் ஒரு தனியார் கட்டிடம் கட்டியுள்ளனர். அவர்கள் கடந்த 3 மாதங்களாக, எங்களை காலி செய்யுமாறு வற்புறுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக கடந்த மாதம் 16ம் தேதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கலெக்டரிடம் முறையிட்டோம். கடந்த ஒரு வாரமாக, அந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள், எங்களை காலி செய்யுமாறு குண்டர்களை வைத்து மிரட்டி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எனவே, தொழிலாளர் நலன் கருதி, எங்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு பதிலாக மேம்பாலத்தின் அடியில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tourist ,
× RELATED தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்ல தடை