×

துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும்

திருப்பூர், நவ.12:திருப்பூர், பூமலூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சுற்றுசுவர் வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர், பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், முதலாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.  இந்த பள்ளி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளது. ஆகையால், இந்த பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவர் வசதி இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும் பள்ளியைச் சுற்றி புதர் மண்டி செடிகொடிகள் மிகுந்துள்ளது. பள்ளிக்கு அருகில் வாழை தோட்டத்து அய்யன் கோயில் செல்லும் சாலை உள்ளதால் இந்த சாலையில் நாள்தோறும் அதிக அளவில்
வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் பள்ளியின் மதிய உணவு இடைவேளையின் போது, கால்நடைகள் மற்றும் நாய்கள் உள்ளே நுழைந்து விடுகின்றன.  இப்பள்ளியில், சுற்றுச்சுவருக்குப் பதிலாக முள்வேலி அமைத்துள்ளனர். இதனால், மழைக் காலங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பூச்சிகள் எளிதில் புகுந்து விடுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்களை போன்ற ஏழை, எளிய மக்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போதிய வசதியில்லாததால் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளோம். இங்கு, கல்விக்கு எந்த குறையும் இல்லை.  மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால், இப்பள்ளி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதினால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. ஆகையால், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க சுற்றுசுவர் கட்டிக்கொடுத்தால் நிம்மதியாக இருக்கும்,’’ என்றனர்.

Tags : elementary school ,
× RELATED 11 இடங்களில் வீதியே பள்ளி! கொரோனா...