×

சாலைகளில் தேங்கி நிற்கும் சாக்கடைநீர் வடிகால் வசதி செய்து தர கோரிக்கை

காங்கயம், நவ.12:காங்கயம் நகராட்சி பகுதியில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழை நீரோடு சாக்கடை நீர் கலந்து சாலைகளில் தேங்கி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காங்கயம் நகராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த 18 வார்டு பகுதிகளிலும் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால் மழை காலங்களில் மழை நீர் வடியாமல் சாலைகளில் குளம்போல பல மணிநேரம் தேங்கி நிற்கிறது. குறிப்பாக காங்கயம் 5 வது வார்டு பகுதியான ராஜாஜி வீதியில் மழை நீர் செல்ல போக்கிடம் இல்லாமல்  சாலையில் தேங்கி அப்பகுதி முழுவதும் குளம்போல காட்சி அளித்தது. நகரின் முக்கிய பகுதியான இங்கு அரசு பள்ளியும், அரசு காப்பீட்டு நிறுவனங்களும், பொதுத்துறை வங்கிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதியில் முறையான வடிகால் வசதி செய்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் பாராமுகமாகவே இருந்து வருவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  

தொடர்ந்து பல மணி நேரம்  வடியாமல் சாலைகளில் குளம் போல மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களும்,  வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.மேலும் மழை நீரோடு சாக்கடை நீரும்  கலந்து தேங்கி நிற்பதால்  அப்பகுதியில் கடும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் எங்கள் பகுதியில் மழை நீர் வடியாமல் பல மணி நேரம் தேங்கி நிற்கிறது. இந்த பிரச்னை குறித்து பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் தீர்க்கப்படாத தொடர் கதையாகவே உள்ளது. மழை நீரோடு சாக்கடை நீரும் கலந்து இப்பகுதியில் கடும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி உள்ளது. கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள்  பரவும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.  மழை நீர் வடிகால் விசயத்தில் சென்னை பேரழிவை படிப்பினையாக உணர்ந்து நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : drainage facilities ,roads ,
× RELATED ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியது...