×

அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி 90ம் ஆண்டு விழா

குன்னூர், நவ. 12: குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி உள்ளது.  இந்த பள்ளியின் 90வது ஆண்டுவிழாவையொட்டி, முன்னாள் மாணவர் சந்திப்பு நடந்தது. முன்னதாக, பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் கூடினர். பள்ளி நிர்வாகத்தினர் சார்பில், முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்கள், தாங்கள் பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்களை கவுரவித்து, வாழ்த்துக்களை பெற்றனர். அவரவர் பயின்ற வகுப்பறைக்குள் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னாள் மாணவ நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்தனர். பள்ளி மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த, 1992ம் ஆண்டு, 10ம் வகுப்பு முடித்த ‘அ’ பிரிவில் படித்த மாணவர்கள் இளம்பரிதி, வசந்தகுமார் ஆகியோர் ஏற்பாட்டில், கேக் வெட்டி, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கினர். அந்த வகுப்பு மாணவர்கள் சார்பில், பள்ளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் நன்கொடைக்கான காசோலை கார்டைட் தொழிற்சாலை பொதுமேலாளர் சிங்கிடம், வழங்கப்பட்டது.

கடந்த, 1994ம் ஆண்டு மாணவர்கள், 35 ஆயிரம் ரூபாய் வழங்கினர். அதேபோன்று, முன்னாள் மாணவர்கள் பலர், பள்ளியின் வளர்ச்சிக்கு, நன்கொடை வழங்கினர்.  அருவங்காடு கார்டைட் தொழிலக கலையரங்கில் நடந்த நிறைவு நிகழ்ச்சிக்கு, தொழிற்சாலை பொதுமேலாளர் சிங் தலைமை வகித்தார். சங்கர், வரவேற்றார். ரேணு சிங், முன்னிலை வகித்தார். துவக்கத்தில், இறந்துபோன ஆசிரியர்கள், மாணவர்கள் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  பள்ளி வரலாறு குறித்து, தலைமையாசியை சுதா பேசினார். முன்னாள் தலைமையாசிரியர்கள் காளிமுத்து, லெனின், ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்களை, பொது மேலாளர் பி.கே., சிங், ரேணு சிங் ஆகியோர் கவுரவித்தனர்.

Tags : Arvangadu Kartid Factory Secondary School ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 336 ஏரிகளில் 90 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது