×

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருப்பூர், நவ.12:  திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 19வது வார்டு ஜி.என் பாலன் நகரில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரி மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி 19வது வார்டுக்குட்பட்ட பொம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ஜி.என்.பாலன்நகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 1500க்கும் மேற்பட்டோர் அங்கு வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜி.என்.பாலன்நகரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் சுமார் 100  பேர் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவன தலைவர் கார்மேகம், மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில் நேற்று அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் பொம்மநாயக்கன்பாளையம் நெருப்பெரிச்சல் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.  அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் எங்கள் பகுதிக்கு சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  மேலும் கடந்த ஆண்டு இந்த பகுதியில் செல்லும் ஓடை உடைந்து மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. தற்போது மழைகாலம் தொடங்கி உள்ள நிலையில் பொம்மநாயக்கன்பாளையம் முதல் நஞ்சராயன்குளம் வரை உள்ள ஓடையை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும்,’’ என்றனர்.   இந்த பிரச்னைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Tags : road ,emergency pickup ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...