×

கெட்டிசமுத்திரம் ஏரிக்கரையில் விரிசல் அந்தியூர்-பர்கூர் இடையே போக்குவரத்து மாற்றம்

அந்தியூர், நவ.12:  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் 17.50 அடி உயரத்தில் கெட்டிசமுத்திரம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி ஆகியவற்றில் இருந்து வெளியேறும் உபரிநீர் வருகிறது. வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் எண்ணமங்கலம் ஏரி, வரட்டுப் பள்ளம் அணை ஆகியவை நிரம்பி உபரிநீர் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை கெட்டி சமுத்திரம் ஏரி அதன் முழு கொள்ளளவான 17.48 அடியை எட்டியது. உபரிநீர் அந்தியூர் பெரிய ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 10 ஆண்டுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பி உள்ளது.இந்த ஏரியின் மேற்குகரை வழியே அந்தியூரில் இருந்து பர்கூர், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், ஆலாம்பாளையம், செல்லம்பாளையம், மூலக்கடை செல்லும் சாலை அமைந்துள்ளது.தொடர் மழையால்இந்த சாலையில் கரைக்கும், சாலைக்கும் இடையே சுமார் 300 மீட்டர் அளவிற்கு விரிசல்  ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்தியூர்-பர்கூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்தை குருநாதசுவாமி வனக் கோயில் வழியாக மாற்றி திருப்பி விட்டனர்.மேலும், சம்பவ இடத்தை அந்தியூர் எம்எல்ஏ ராஜா கிருஷ்ணன், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், வட்டாட்சியர் மாலதி, பவானி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் சேகர், இன்ஸ்பெக்டர் ரவி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுலைமான் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கரையில் மேலும் விரிசல் ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : Traffic Transfer ,Kettisamudram Lake ,Cracks Anthiyur-Burgur ,
× RELATED வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது:...