சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணி மண்டபம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும்

ஈரோடு, நவ. 12: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் கட்ட நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாரை, தப்பட்டை முழங்க வந்து நேற்று மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் வரலாறு மீட்புக்குழு சார்பில் தாரை, தப்பட்டைகள் முழங்க நூதனமுறையில் பொல்லானுக்கு நினைவு சின்னம் அமைக்க இடம் ஒதுக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமையில் மனு அளிக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தாரை, தப்பட்டை அடித்தபடி மனு அளிக்க செல்லக் கூடாது என்றனர். இதைத்தொடர்ந்து, நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலையின் போர்ப்படை தளபதி பொல்லான், பிரிட்டீஸ் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான அரச்சலூர் நல்லமங்காபாளையத்தில் ஊர்பொதுமக்கள் சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நினைவு சின்னம் கட்டப்பட்டது. ஆனால், இதை கடந்த 2017ம்ஆண்டு டிசம்பர் 11ம் தேதி வருவாய்த்துறையினர் அனுமதி இல்லாமல் கட்டியதாக கூறி இடித்து விட்டனர். மீண்டும் இதே இடத்தில் நினைவு சின்னம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாவட்ட வருவாய்த்துறையினர் நிலத்தை ஒதுக்கீடு செய்து முன்மொழிவு அனுப்பி உள்ளனர். மேலும், மாவீரன் பொல்லான் நினைவு நாளை அரசு விழாவாக சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டு பொல்லான் நினைவுநாளை நல்லமங்காபாளையத்தில் அனுசரிக்க வேண்டும். அதற்காக நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  இதுதவிர, ஊர் பொதுமக்கள் சார்பில் சொந்த செலவில் நினைவு சின்னம் கட்டிக் கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் பொல்லானுக்கு மணி மண்டபம் கட்ட நிலத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Related Stories:

>