சண்டே மாஸ் கிளினிங் திட்டத்தில் 66 மெட்ரிக் டன் குப்பை சேகரிப்பு

ஈரோடு, நவ. 12: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் குப்பை சேராத வகையில் தொட்டிகள் அகற்றப்பட்டு வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் 4 மற்றும் 5 வார்டுகளை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டு மைக்ரோ கம்போஸ்டிங் சென்டரில் பிரிக்கப்படுகிறது. குப்பை தொட்டி அகற்றப்பட்டுள்ள நிலையில் சாலையோரம் வீசப்படும் குப்பைகளையும், அதிகமாக சேர்ந்துள்ள குப்பைகளையும் அகற்றும் வகையில் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை சண்டே மாஸ் கிளினிங் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அதன்படி, நேற்று முன்தினம் ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்திற்குட்பட்ட கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ்.நகர், வளையக்கார வீதி, அய்யப்பன் கோவில் வீதி, மூலப்பாளையம், பூந்துறைரோடு, எல்.ஐ.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்தது.

Advertising
Advertising

இந்த பணிகளில் 50 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், சுகாதார அலுவலர் ஜாகிர்உசேன், சுகாதார ஆய்வாளர்கள் மதன்மோகன், மணிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்காக 6 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் நடந்த இந்த சண்டே மாஸ்கிளினிங்கில் 66 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வெண்டிபாளையம் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

குப்பை அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் குப்பை கொட்டாத வகையில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றும் வகையில் சண்டே மாஸ் கிளினிங் நடைபெறும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில்,`ஈரோடு மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, 90 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் மாநகரில் இருந்த 600 குப்பை தொட்டி அகற்றப்பட்டுள்ளது. சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் வகையில் சண்டே மாஸ் கிளினிங் நடத்தப்பட்டு வருகிறது.  சாலையோரம் சேரும் குப்பைகளை அகற்றுவதால் அந்த இடம் சுத்தப்படுத்துவதுடன் மீண்டும் குப்பை கொட்டாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: