×

ஊனம் ஏற்பட்டு உயிருக்கு போராடும் குட்டி யானையை காப்பாற்ற வேண்டும்


கோவை, நவ. 12:  காலில் ஊனம் ஏற்பட்டு, எழுந்து நிற்க முடியாமல் உயிருக்கு போராடும் குட்டி யானையை காப்பாற்ற வேண்டும் என்று கோவையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்  மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ராஜாமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள், பொதுமக்கள் கோரிக்கையை மனுவாக அளித்தனர். குட்டி யானையை காப்பாற்ற கோரிக்கை: வால்பாறையில் கால் ஊனம் ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் குட்டி யானையை காப்பாற்றகோரி விடுதலை சிறுத்தை கட்சி, கோவை மண்டல அமைப்பு செயலாளர் கலையரசன் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கோவை வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்துள்ளது. இதில், 8 மாத குட்டி யானைக்கு காலில் ஊனம் ஏற்பட்டு அதே பகுதியில் கடந்த 4 வாரமாக அவதிப்பட்டு வருகின்றது. இதனால் தாய் யானையும், அங்கேயே குட்டி யானையை பாதுகாத்து வருகின்றது. மேலும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் உயிர்சேதம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக குட்டி யானையை மீட்டு, உரிய மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பணத்தை ஏமாற்றிய டிராவல்ஸ் நிறுவனத்திடம் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை சித்தாபுதூர் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திடம், சுமார் 800 நபர்கள் வெளிநாடு சுற்றுலா செல்ல பணம் அளித்திருந்தோம். ஆனால் டிராவல்ஸ் நிறுவனம் வெளிநாடு அழைத்து செல்லாமல் தற்போது நிறுவனத்தை மூடிவிட்டனர்.  இதனால் சுமார் ரூ.30 கோடியை இழந்துள்ளோம். அதன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் உரிமையாளரின் மகன் மட்டும் கைது செய்யப்படவில்லை. அவரையும் கைது செய்ய வேண்டும். எங்களது பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. பீளமேடு கிருஷ்ணா நாயக்கர் லே-அவுட் பகுதியில் சாக்கடை நீர் வீட்டிற்குள் வருவதை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை பீளமேடு 62வது வார்டில் உள்ள கிருஷ்ணா நாயக்கர் லே-அவுட் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள சாக்கடைநீர் சென்று சேரும் இடத்தில் உள்ள பள்ளம், மேடாக இருக்கிறது.

இதனால் மழை காலங்களில் சாக்கடை நீருடன் கலந்து மழைநீரும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பள்ளிச்செல்லும் மாணவ- மாணவிகள், முதியவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சாக்கடைநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கோவை மாவட்ட இளைஞர் நற்பணி குழு சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது : கோவை சுங்கம் பார்க் ரோட்டில் பாதாள சாக்கடை தோண்டப்பட்டது. அந்த பாதாள சாக்கடை குழியில் இருந்து அருகில் உள்ள வாலாங்குளத்து நீர் ஊற்றாக வெளிவருகிறது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தர்மபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த...