×

அர்த்தனாரிபாளையத்தில் அட்டகாசம் செய்த ஒற்றை யானையை பிடிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி, நவ.12:  பொள்ளாச்சி அருகே அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானை பிடிக்க வனப்பகுதியைெயாட்டி 2 கும்கி யானைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சியை அடுத்த நவமலையில் சில மாதங்களுக்கு முன்பு, முதியவர் ஒருவர்  மற்றும் சிறுமி என இருவரை தாக்கி கொன்ற ஒற்றை ஆண் காட்டு யானை,  அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து அர்த்தநாரிபாளையம், பருத்தியூர் பகுதியில் சுற்றித்திரிகிறது.  மேலும், அப்பகுதியில் உள்ள தோட்டங்களில்  புகுந்து தென்னை மற்றும் வாழைகளை நாசப்படுத்துவதுடன், தோட்டத்து சாலை  வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.  சில நாட்களுக்கு முன்பு  அர்த்தனாரிபாளையத்தில் தோட்டத்தில் புகுந்த யானை, விவசாயி ரத்தினசாமி  என்பவரை தாக்கியது. தொடர்ந்து அட்டகாசம் செய்த  ஒற்றை காட்டு யானையை  அடர்ந்த காட்டிற்குள் விரட்ட வனத்துறை மூலம்  தனிக்குழு அமைத்தும்,  வனத்துறையினரின் முயற்சி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பகல்  மற்றும் இரவு என தொடர்ந்து கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில், மீண்டும் ஒரு  தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை, விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி  கொன்றது. மேலும், ரோட்டில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த திருமாத்தாள்  என்ற பெண்னை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இதனால்,  ஆத்திரமடைந்த அர்த்தனாரிபாளையம் பகுதி பொதுமக்கள், நேற்று வால்பாறை ரோடு  நா.மூ.சுங்கம் பகுதியில் பல மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து,  அர்த்தனாரிபாளையம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு  யானையை பிடித்து வரகளியார் அடர்ந்த காட்டில் விடுவதற்கான நடவடிக்கையில்  வனத்துறையினர் இறங்கினர். இதற்காக டாப்சிலிப்பில் உள்ள கோழிக்கமுத்தி  முகாமில் இருந்து கலீம் மற்றும் பாரி ஆகிய 2 கும்கி யானைகள்  அர்த்தனாரிபாளையம் கிராமத்துக்கு நேற்று அதிகாலை வரவழைக்கப்பட்டன. இதற்கிடையே  நேற்று முன்தினம் நள்ளிரவில் மீண்டும் அந்த ஒற்றை யானை அர்த்தனாரிபாளையம்  கிராம பகுதிக்கு வந்துள்ளது. அதனை பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர்  பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் விடிய விடிய   ஈடுபட்டனர். பின் அந்த  யானை குண்டு வருட்டி பள்ளம் என்ற இடத்திற்கு சென்றது. ஆனால் அடர்ந்த  காட்டிற்குள் செல்லாமல், நேற்று காலை நேரத்தில் அங்கேயே நின்று கொண்டது.இந்நிலையில்,  அட்டகாசம் செய்யும் யானை தோட்டப்பகுதி மற்றும் ஊருக்குள் வருவதை தடுக்க 100க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாரும் இணைத்து  தனித்தனி வாகனங்களில் ரோந்து செல்வதை தொடர்ந்துள்ளனர். இதில் ஒரு  வாகனத்தில், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ஆனைமலை புலிகள் காப்பக இணை  இயக்குனர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம், ஓய்வுபெற்ற வனச்சரகர்  தங்கராஜ் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ரோந்து சென்றனர்.

இதற்கிடையே  கோழிக்கமுத்தியிலிருந்து வரழைக்கப்பட்ட கலீம் மற்றும் பாரி என இரு  கும்கிகளும், அர்த்தனாரிபாளையம் அருகே பெருமாள் மலையடிவாரத்தில் நிற்க  வைக்கப்பட்டன. காட்டு யானை எந்த பகுதியில் உலா வருகிறது? அதனை எவ்வாறு பிடிப்பது? என வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்தனர்.   யானையை ஊசிபோட்டு பிடிக்க, யானைக்கு பிடித்தமான உணவு பொருட்களை ஆங்காங்கே  படையலாக வைக்கப்பட்டது. அட்டகாச யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரிசி யானை
பொள்ளாச்சியை  அடுத்த அர்த்தனாரிபாளையம் மற்றும் பருத்தியூர் பகுதியில் கடந்த சில வாரமாக  தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை காட்டுயானை, தோட்டங்களில் புகுந்து  தென்னை மற்றும் வாழைகளை நாசப்படுத்துவதுடன், அங்குள்ள தோட்டத்து வீடுகளை  இடித்து விடுகிறது. பின் சமையல் அறைக்கு சென்று ரேஷன் அரிசியை எடுத்து உண்டு  செல்கிறது. இதனால் தற்போது அந்த அட்டகாச காட்டு யானைக்கு, அப்பகுதி  பொதுமக்கள் ‘அரிசி யானை’ என பெயரிட்டுனர். அவர்கள் யானையை  விரட்டும்போது, அரிசி யானை, அரிசி யானை என சத்தமிட்டனர்.

Tags : Ardhanaripalayam ,
× RELATED நகராட்சி கமிஷனர் இல்லாததால் சீல்...