×

அரசு மருத்துவ கல்லூரியில் விரைவில் புதிய மருத்துவமனை

கோவை, நவ. 12:  கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள், நோயாளிகளின் வசதிக்காக 500 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை விரைவில் கட்டப்படவுள்ளது.  கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புறநோயாளிகளாக மட்டும் தினமும் 7,500க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர்.  தவிர, ரத்தப்பரிசோதனை, அறுவை சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் பெற என, பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து வருகிறது. பீளமேட்டில் உள்ள கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக தினமும் வந்து செல்ல வேண்டிய நிலை நீண்ட வருடமாக இருக்கிறது. மேலும், மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 100 எம்.பி.பி.எஸ். சீட் பெற தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மாணவர்களின் தேவைக்காகவும், புறநகரில் இருந்து வரும் நோயாளிகள் பயனடையும் வகையிலும், பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை ஏற்படுத்த அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

உள்ளாட்சி அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோரின் முயற்சியினால் 500 படுக்கைகளுடன் கூடிய புதிய மருத்துவமனையை ஏற்படுத்த தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களை ஏற்படுத்த மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதத்தில் நிதி வழங்க வேண்டும். அதன்படி, ஒரு எம்.பி.பி.எஸ். இடத்திற்கு ரூ.1.2 கோடி வீதம், நூறு மருத்துவ இடங்களுக்கு ரூ.120 கோடி நிதி வழங்கப்படவுள்ளது. இதில், முதற்கட்டமாக ரூ.50 கோடி கட்டுமான பணிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதற்காக மருத்துவமனை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் புதிய மருத்துவமனை கட்டிடத்துக்கான வரைபடம் தயார் செய்யப்பட்டு ஒப்புதலுக்கு அனு ப்பப்பட்டுள்ளது. இதனால், விரைவில் புதிய மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவமனை டீன் அசோகன் கூறியதாவது: இடநெருக்கடி, மாணவர்களின் மருத்துவ படிப்பிற்காகவும் இந்திய மருத்துவ கவுன்சில் விதியின்படி மருத்துவ கல்லூரி வளாகத்தில் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்படவுள்ளது. இங்கு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் என மாணவர்களின் படிப்பிற்கு தேவையான துறைகள் செயல்படும். 500 படுக்கை வசதிகள் இருக்கும்.  இதனால், மருத்துவ மாணவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நோயாளிகளும் பயனடையலாம். அவினாசி தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளில் சிக்கும் நோயாளிகளுக்கு இங்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படும். இதனால், நேர விரயம் தவிர்க்கப்படும். தற்போது கட்டிடம் கட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றங்கள் செய்யப்பட்டு பொதுப்பணித்துறையின் தலைமை இன்ஜினியரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின்னர், சுகாதார துறை, நிதித்துறையின் ஒப்புதல்கள் பெறப்பட்டு டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : hospital ,Government Medical College ,
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின்...