×

ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் தர்ணாவில் ஈடுபட முயன்ற முதியவரிடம் அதிகாாி சமரசம்

புதுச்சேரி, நவ. 12: ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து குடிமை பொருள் வழங்கல் துறை முன்பு முதியவர் தர்ணாவில் ஈடுபட முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி, இருசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (64). முதியவரான இவர் மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். குடும்ப தலைவரான இவரது பெயர் சமீபத்தில் ரேஷன் கார்டில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. அவர் பொருட்கள் வாங்கிச் செல்லும் ரேஷன் கடைக்கு சென்றபோது இது உண்மையென தெரியவரவே அதிர்ச்சியடைந்த அவர், நேற்று தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகம் வந்தார். அங்கிருந்த பணியாளர்களிடம் பெயர் நீக்கம் தொடர்பாக கேட்டபோது, ஏற்கனவே வேறு கார்டில் இந்த பெயர் இருந்ததால் நீக்கப்பட்டுஇருக்கலாம் என மழுப்பலாக பதில் அளித்துள்ளனர். இதை ஏற்க மறுத்த முதியவர் தனது பெயர் நீக்கத்தை கண்டித்து தர்ணாவில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த துறை அதிகாரிகள், 4 நாள் காலஅவகாசம் கொடுத்தால் தவறை
கண்டுபிடித்து சரிசெய்து விடுவதாக உறுதியளித்ததால் போராட்டத்தில் ஈடுபடுவதை கைவிட்ட முதியவர் அங்கிருந்து வீடு திரும்பினார்.


Tags : Mudhayi ,removal ,
× RELATED மின்சாரம் தாக்கி வாலிபர் பலி