×

முகாம் சிறையில் உள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்க நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

திருச்சி, நவ.12: திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழகர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களின் குடும்பத்தினருடன் ஒப்படைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் கட்சியினர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் வெளிநாடு தப்பி செல்ல முயன்றதாக அவர்கள் மீது பொய்வழக்கு பதிந்து சிறப்பு முகாமில் அடைத்து வைத்து இது நாள் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல், நீதிமன்றத்தில் வழக்கு நடத்தாமல், வழக்கை காரணம் காட்டி நீண்ட ஆண்டுகளாக சிறையிலேயே அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல் ஆகும். மேலும் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்த பிரித்து தணித்து வைத்திருப்பதினால் மனரீதியான சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகிறார்கள். இதன் தாக்கமாக 2 நாட்களுக்கு முன்பு சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழகர்கள் தற்கொலைக்கு முயன்றனர். எனவே சிறப்பு முகாம்களில் ஆய்வு செய்து, அவர்களை அவர்களது குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamils ,camp ,Sri Lankan Tamils ,
× RELATED கங்கைகொண்ட சோழபுரம் பாதுகாப்பு...