×

இளைஞர்கள் தொழில் துவங்க மானியத்துடன் வங்கி கடன்

திருவாரூர், நவ. 12: திரூவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:குறு,சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம் வரையிலான உற்பத்தி தொழில் செய்வும், ரூ.3 லட்சம் வரையிலான சேவை மற்றும் ரூ.1 லட்சம் வரையில் வியாபாரம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தொடங்கவும் 25 விழுக்காடாக அதிக பட்சம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையில் மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெற்று வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பொது பிரிவினருக்கு வயது வரம்பு 18 முதல் 35 வயது வரையும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் இராணுவத்தினர், மாற்று திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு 18 முதல் 45 வயது வரையும் இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டு விண்ணப்ப நகல்களுடன் குடும்ப அட்டை, கல்வி சான்று , சாதிச்சான்று, விலைப்புள்ளி , திட்ட அறிக்கை, மற்றும் உறுதி மொழி பத்திரம் ஆகியவற்றின் நகல்களுடன் மாவட்ட தொழில் மையம், திருவாரூர் என்ற முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வணிகர்கள் வங்கி கடன் வசூல் ஒத்திவைக்க வேண்டும்