×

தென்னிலை பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களால் விவசாயிகள் அச்சம், பீதி

க.பரமத்தி, நவ. 12: தென்னிலை அடுத்த வைரமடை சுற்று கிராமப் புறங்களில் தொடர் திருட்டுகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு திருட்டை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை காவல் நிலைய சரகத்தில் தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, மொஞ்சனூர், துக்காச்சி, அஞ்சூர், கார்வழி, கோடந்தூர் ஆகிய 8 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 20க்குமேற்பட்ட குக்கிராமங்களில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஊராட்சிகளுக்குட்பட்ட குக்கிராமங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத நிலையில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் இரு சக்கர வாகனங்களையே அதிகம் பயன்படுத்தி செல்ல வேண்டிய பல்வேறு இடங்களுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக தென்னிலை காவல் நிலைய சரகத்தில் வைரமடை சுற்று வட்டார பகுதியில் வெவ்வேறு இடங்களில் தனியே வரும் பெண்ணிடம் நகை பறிப்பு வீடுகளில் பணம், நகை திருட்டுக்கள் நடைபெற்று வருவதும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இது குறித்து பொருட்களை இழந்த பலரும் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் கோடந்தூரில் மளிகை கடையில் மகேஸ்வரி என்பவரிடம் நகை பறிப்பு, வைரமடையில் பால் வாங்க வந்த பெண்ணிடம் கத்திமுனையில் செல்போன் பறிப்பு, மூத்தநாய்க்கன்வலசில் கத்தி முனையில் பெண்ணிடம் நகை செல்போன் பறிப்பு, இதே போல காட்டுமுன்னூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்னை காலால் உதைத்து மர்ம நபர் நகை பறிப்பு ஆகியவை நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பலரும் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு இப்பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : Farmers panic ,India ,
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...