×

திருக்கழுக்குன்றம் நால்வர்கோயில்பேட்டையில் அரசு நடுநிலைப்பள்ளியில் சமையல் அறையாக மாறிய வகுப்பறை

திருக்கழுக்குன்றம், நவ. 12: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நால்வர்கோயில்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், சமையல் கூடம் இல்லாததால் வகுப்பறையில் சமையல் செய்யும் அவல நிலை 5 ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால், மாணவர்கள் அமர இடம் இல்லாமல் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி நால்வர் கோயில்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியில் கட்டப்பட்ட சமையல் அறை கட்டிடம் பழுதடைந்து முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், சமையல் செய்ய இடமில்லாமல், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வகுப்பறையில், மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப போதிய வகுப்பறைகள் இல்லை.  இந்த வேளையில், சமையல் இல்லாமல் ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் இடநெருக்கடியில் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சமையல் செய்யும்போது ஏற்படும் புகையினால், மாணவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்பட உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் ஏற்பட்டு கடும் சிரமம் அடைகின்றனர்.  இதனால், இப்பள்ளிக்கு தனியாக சமையல் அறைகட்டிக் கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே, மேற்கண்ட அரசு நடுநிலைப்பற்றியில் தனியாக ஒரு சமையல் அறை கட்டித் தர வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags : Classroom ,Middle School ,kitchen ,Nalvarkoilpet ,
× RELATED திருமயம் அருகே ஒத்தபுளி குடியிருப்பு:...