×

வேடந்தாங்கல் ஊராட்சி அரசு பள்ளியில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டிய மைதானம்

மதுராந்தகம், நவ. 12: மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கம் ஊராட்சி அரசு பள்ளி மைதானத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால், மாணவ, மாணவிகள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில், வேடந்தாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள வளையபுத்தூர், வெள்ளபுத்தூர், சித்தாத்தூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கான விளையாட்டு மைதானம், பள்ளியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு, தற்போது மாணவ, மாணவிகள் பயன்படுத்த முடியாத வகையில் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கிரிக்கெட் பந்து, கபடி, கால் பந்து உள்பட எந்த விளையாட்டிலும் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.

மாணவ, மாணவிகள் வகுப்பில் பாடம் முடிந்ததும், நேராக வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். உடற்கல்வியில் ஆர்வம் இருந்தாலும், மாணவர்களுக்கு எவ்வித வசதியும் செய்யாமல், பள்ளி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். மாலை வேளைகளில் சிறிது நேரம் விளையாட்டில் ஈடுபட்டால் மாணவர்களின் உடலும், மனமும் நலமாக இருக்கும் என மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், பள்ளி கல்வி நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.  எனவே, மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை அதிகாரிகள் வேடந்தாங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு அதனை சீர்ப்படுத்தி, மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Vedanthangal Panchayat ,
× RELATED வையம்பட்டி ஒன்றிய பகுதியில் தேர்வான...